search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் அதிகாரிகள்"

    • கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை உதவி மையத்துக்கு 41,894 அழைப்புகள் வந்துள்ளன.
    • பெண் அதிகாரிகள் இதனை கேட்டு அழுவார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு ஆபத்து நேரங்களில் உதவி செய்யவும், பாதுகாப்பு தரவும் தமிழக அரசு சார்பில் 24 மணி நேர சேவை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    பெண்கள் ஆபத்து நேரங்களில் அவசர உதவிக்கு 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஏராளமான பெண்கள் இந்த உதவி மையத்தை தொடர்பு கொண்டு பலன் அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் உதவி மையத்துக்கு வரும் பெரும்பாலான அழைப்புகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 181 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தான் கோயம்பேடு பகுதியில் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஊழியர்கள் காவல்துறையினரை உஷார்படுத்தினார்கள்.

    அவர்கள் அந்த பெண்ணை தேடி கண்டு பிடிக்க முயன்ற போது அவர், தான் கிண்டியில் இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் இரவு முழுவதும் காவல்துறையினரை அவர் சுற்றவிட்டார். பின்னர் தான் யாரோ போன் செய்து ஏமாற்றுவதை போலீசார் உணர்ந்துள்ளனர்.

    இதேபோல் பெண்கள் உதவி மையத்துக்கு தினமும் பல போலி அழைப்புகள் வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை உதவி மையத்துக்கு பெறப்பட்ட அழைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த மாதிரியான போலி அழைப்புகள் என்று தெரிய வந்துள்ளது.

    கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை உதவி மையத்துக்கு 41,894 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 22,868 அழைப்புகள் போலியானவை. 15,759 அழைப்புகள் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய அழைப்புகள் 3,267 அழைப்புகள் தகவல்களை தேடி அல்லது வழங்குபவர்களிடம் இருந்து வந்து உள்ளதாக சமூக நலத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் இது கடந்த ஆண்டின் தொடர்ச்சியே ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை வந்த 1 லட்சத்து 10 ஆயிரத்து 866 அழைப்புகளில் 67,304 அழைப்புகள் போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சமூக நலத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சில நேரங்களில் போனில் அழைப்பவர்கள் ஆபாசமாக அறுவறுக்கத்தக்க வகையில் பேசுவார்கள். பெண் அதிகாரிகள் இதனை கேட்டு அழுவார்கள். இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கிறது.

    ஒவ்வொரு முறையும் இதற்கு காவல்துறையில் புகார் அளிப்பது கடினம். ஆனாலும் இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இருப்பினும் உண்மையான அழைப்பாளர்களுக்கு தேவையான உதவிகளும் உடனடியாக கிடைக்கும். கிட்டத்தட்ட 27 சதவீத அழைப்புகள் குடும்ப பிரச்சினை பற்றியே வரும். கடந்த ஆண்டு பெண்களை துன்புறுத்துவது குறித்து 200 அழைப்புகள் வந்தன. ஆனால் இந்த ஆண்டு அதுபோல் எந்த அழைப்புகளும் வரவில்லை.

    இந்த உதவி மையம் 2018-ல் தொடங்கப்பட்டது. என்றாலும் ஒரே பாலின ஈர்ப்பு கொண்டவர்களிடம் இருந்து கடந்த ஆண்டு முதல் தான் அழைப்புகள் வந்துள்ளன. பெரும்பாலான அழைப்புகள் பிற மாவட்டங்களில் இருந்து வந்துள்ளன. தங்களது ஒரே பாலின உறவை பற்றி தெரிந்து கொண்ட குடும்பத்தினரால் தாங்கள் வீட்டில் அடைக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்து கொடுத்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது குறித்து சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி கூறும்போது, "ஆபத்தில் உதவி தேவைப்படும் பெண்கள் 112 என்ற உதவி எண்ணுக்கும் அழைக்கலாம். அந்த அழைப்பு 181 உதவி மையத்துக்கு மாற்றப்படும். மேலும் நேரடியாக அவர்கள் 181 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம்" என்றார்.

    ×